search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சி மன்ற குழு கூட்டம்"

    • 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. 3 மாநிலங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆட்சி அமைக்க உள்ளது.
    • டெல்லியில் இன்று நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    புதுடெல்லி:

    மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆட்சி அமைக்க உள்ளது.

    இதையடுத்து, அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். 3 மாநிலங்களிலும் யாரை முதல்-மந்திரிகளாக தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்துறை மந்திரி அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்குச் சென்று 3 மாநிலங்களின் முதல் மந்திரிகளின் பெயர்கள் மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து கலந்துரையாடினார்.

    இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை நடத்தி 3 மாநிலங்களின் சட்டசபை கட்சி கூட்டங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. 3 மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


    மிச்சாங் புயலில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க.வினர் அனைவரும் அங்கு மக்களுக்கு சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

    தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருந்தது. மிசோரமிலும் நம் பலம் இரட்டிப்பாகியது. தெலுங்கானாவில் நமது பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. நன்றாக உள்ளது ஆனால் மாநில அளவில் பலம் இல்லை என்று பரப்பப்படும் வதந்தி தவறானது.

    தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பின்னர் தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. காங்கிரசுக்கு 7 முறை இந்த வாய்ப்பு கிடைத்து, ஒரே ஒரு முறைதான் 3-வது முறையாக நுழைய முடிந்தது. தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.க. 17 முறை தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது. 10 முறை பா.ஜ.க. வெற்றி பெற்றது. குஜராத் போன்ற மாநிலத்தை 7 முறை வென்றுள்ளோம். எம்.பி. தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்.

    பா.ஜ.க.வின் ஆட்சி முடிவெடுப்பது மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றை மக்கள் விரும்புகிறார்கள். ஒரு அரசாங்கமாக எங்களிடம் நேர்மறையான எண்ணம் இருப்பது பெரிய விஷயம். எங்கள் கட்சியில் பதவிக்கு எதிரான நிலை இல்லை. இத்தேர்தலில் கிடைத்த வெற்றி எமது கூட்டு பலத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டரும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். கட்சியை கட்டியெழுப்புவதில் தங்கள் வாழ்நாளை செலவிட்டவர்களும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என தெரிவித்தார்.

    ×